மோடி விஷயத்தில் அமெரிக்கா இரட்டை வேடம்: அத்வானி விமர்சனம்

புதுடில்லி: ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விஷயத்தில், அமெரிக்கா இரட்டை நிலையை கடைபிடிக்கிறது,'' என, பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் பிரபல,"டைம்' பத்திரிகை, மோடியின் படத்தை அட்டையில் அச்சிட்டு, தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து, அத்வானி தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: மோடி விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலையை கடைபிடிக்கிறது. மோடிக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து, 2008ம் ஆண்டு நான் அமெரிக்க சென்ற போது அப்போதைய வெளியுறவு அமைச்சர் கண்டோலிசா ரைசிடம் தெரிவித்தேன். அவர் இந்த செய்தியைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். ஜனநாயக முறைப்படி முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது இது முதல் முறை என, அவரிடம் நான் தெரியப்படுத்தினேன். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் எல்லாம் மோடியை பற்றி புகழ்ந்து பேசும் அதே நேரத்தில், அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. காந்திஜி, வல்லபாய் படேலுக்கு அடுத்தபடியாக, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மோடியின் படம், "டைம்' பத்திரிகையில் வெளிவந்துள்ளது. "இந்தியா டுடே' பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வில் அடுத்த பிரதமராக மோடிக்கு 24 சதவீத ஆதரவு உள்ளதாகவும், ராகுலுக்கு 17 சதவீதம் மட்டுமே ஆதரவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.