|

கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்தையும் உலுக்கியது ஆபாச பட விவகாரம்

எம்.எல்.ஏ.,க்கள் சங்கர் சவுத்ரி மற்றும் ஜெதாபர்வத்








காந்தி நகர்: கர்நாடக சட்டசபையில் ஆபாச படம் பார்த்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இப்போது, குஜராத் சட்டசபையிலும், சபை நடவடிக்கைகளின் போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் ஆபாச படம் பார்த்தது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தால், நேற்று மாநில சட்டசபையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த ஆபாசப்பட விவகாரத்தால், முதல்வர் மோடியின் ஆட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.



குஜராத் சட்டசபை நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்த போது, பா.ஜ., கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சங்கர் சவுத்ரி மற்றும் ஜெதாபர்வத் ஆகியோர் தங்களின் டேப்லெட் கம்ப்யூட்டரில், பெண்களின் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என, குஜராத்தி மொழி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. அத்துடன் அந்த பத்திரிகையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஜானக் தவே, சட்டசபை சபாநாயகரிடமும் புகார் செய்தார்.



பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ""எம்.எல்.ஏ., சங்கர் சவுத்ரி, தன் டேப்லெட் கம்ப்யூட்டரில், முதலில் சுவாமி விவேகானந்தரின் படங்களை பார்த்தார். பின்னர் சில கேலி சித்திரங்களை பார்த்தார். அதன்பின் பெண்களின் ஆபாசப் படங்களைப் பார்த்தார். அவற்றை அருகிலிருந்த மற்றொரு எம்.எல்.ஏ.,வான பர்வத்திற்கும் காண்பித்தார். உடனே நான் சபாநாயகர் கன்பத் வாசவாவின் சேம்பருக்கு சென்று, அவரின் தனி உதவியாளரிடம் இது பற்றி புகார் தெரிவித்தேன். உடனே சபாநாயகருக்கு தகவல் தெரிவித்து, எம்.எல்.ஏ.,க்கள் ஆபாச படம் பார்ப்பது நிறுத்தப்பட்டது,'' என்றார்.



பா.ஜ., தலைவர் மறுப்பு: பா.ஜ., மாநில தலைர் விஜய் ரூபானி கூறுகையில், ""எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு. காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில், இந்த புகார்கள் ஜோடிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு சம்பவமே நடக்கவில்லை. இருந்தாலும், தேவைப்பட்டால், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.



சட்டசபையில் அமளி: குஜராத் சட்டசபை நேற்று பகல் 12 மணிக்கு துவங்கிய போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தார்த் படேல் மற்றும் இக்பால் படேல் ஆகியோர், ""சபையில் ஆபாச படம் பார்த்த, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இருவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,'' என்றனர். உடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்ற எம்.எல்.ஏ.,க்களும், இதே கோரிக்கையை விடுத்தனர். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஆபாச படம் பார்த்ததாக வெளியான செய்தி இடம் பெற்றிருந்த பத்திரிகையையும் சபையில் காட்டினர். சபையில் பத்திரிகையை காட்ட அனுமதி இல்லை என, சபாநாயகர் கூறியும், அதை யாரும் கேட்கவில்லை. அத்துடன் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, சபையை ஒரு மணி நேரத்திற்கு சபாநாயகர் கன்பத் வாசவா ஒத்திவைத்தார்.



முதல்வர் அலுவலகம் முன் கோஷம்: இதையடுத்து, முதல்வர் நரேந்திர மோடியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ஆபாச படம் பார்த்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இருவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். ஒரு மணி நேர ஒத்திவைப்புக்கு பின் மீண்டும் சட்டசபை கூடிய போது, ஆபாச படம் பார்த்ததாக புகார் கூறப்பட்ட பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கர் சவுத்ரி தன் விளக்கத்தை அளிக்க முயன்றார். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, அவருக்கு எதிராக கோஷமிட்டனர். சிலர் பேப்பர்களையும் கிழிந்து எறிந்தனர். இதையடுத்து, குஜராத் சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேசா, விதி எண் 52ன் கீழ், தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரியிருந்தார். தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. உடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன் பின்னும், அவர்கள் கோஷம் போட்டதால், மீண்டும் அரை மணி நேரத்திற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.



உரிமை மீறல் கமிட்டியின் விசாரணைக்கு உத்தரவு: குஜராத் சட்டசபையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் ஆபாச படம் பார்த்த விவகாரம் தொடர்பாக, சட்டசபையின் உரிமை மீறல் கமிட்டி, விசாரணை நடத்தும் என, சபாநாயகர் கன்பத் வாசவா உத்தரவிட்டுள்ளார். மேலும், எம்.எல்.ஏ., சங்கர் சவுத்ரியின் டேப்ளட் கம்ப்யூட்டரை பறிமுதல், அதை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பும்படியும், சட்டசபை செயலரை கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் சட்டத்தின் 194வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளை எம்.எல்.ஏ.,க்கள் மீறியுள்ளதாக தெரிவதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பதிவு செய்தவர் ah kdnl on 12:10 AM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added