|

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் வளர்ச்சி பெறும் - முதல்வர் ஜெயலலிதா


சென்னை: "அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று, முதல் மாநிலமாக மாறும்' என, முதல்வர் ஜெயலலிதா உறுதி தெரிவித்துள்ளார். இதற்காக 15 லட்சம் கோடி ரூபாய் நிதி ஆதாரத்தில், தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் தனிநபர் வருமானம் ஆறு மடங்கு உயர்வதுடன், தமிழகத்தில் புதிதாக 25 லட்சம் வீடுகள் உருவாகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.



தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, தமிழக அரசு தயாரித்துள்ள, "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023' என்ற ஆவண வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023' ஆவணத்தை வெளியிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இந்த ஆட்சி பொறுப்பேற்றதும், தமிழகத்தை முதல் மாநிலமாகக் கொண்டு வருவதே லட்சியம் என அறிவித்தேன். அமெரிக்கா குறித்து மார்ட்டின் லூதர் கிங் கொண்டிருந்த கனவைப் போல், நான் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவை உருவாக்கினேன். தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குதல், வறுமையை முற்றிலுமாக ஒழித்தல், அனைத்து பொதுமக்களும் அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், கல்வி, குடிநீர், உடல்நல மேம்பாடு உள்ளிட்ட அனைத்தையும் பெற்று, ஒளிமயமான, பாதுகாப்பும் அமைதியும் பெற்று வாழச் செய்ய வேண்டும். அனைவரும் பொருளாதார, சமுதாய மேம்பாடு பெற வேண்டும். இதை அடிப்படையாக வைத்தே, இந்த தொலைநோக்குத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.



அடுத்த 11 ஆண்டுகளில், மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும். இது, எதிர்பார்க்கப்படும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம். அடுத்த 11 ஆண்டுகளில் மக்கள் தொகை 15 சதவீதம் அதிகரித்திருக்கும். இந்த காலகட்டத்தில், தனிநபர் வருமானம் ஆறு மடங்கு உயர்ந்து இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில், தமிழகத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ஆறு மடங்கு உயர்ந்து, நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயரும். இதன் மூலம் வறுமை ஒழிக்கப்பட்ட மாநிலமாகத் தமிழகம் மாறும். 2023ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும், 100 சதவீத சுகாதார வசதி பெற்றவர்களாக இருப்பர். திறந்தவெளிக் கழிவறை இல்லாத நிலை உருவாக்கப்படும்.



25 லட்சம் வீடுகள்: குடிசைகள் இல்லாத, தமிழகத்தை உருவாக்க 25 லட்சம்வீடுகள் ஏழை மக்களுக்குக் கட்டித் தரப்படும். உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்கும் வகையில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்; தொழிற்கல்வியும் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், தரமான நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். தொழில் துறை, வீட்டு இணைப்பு, கிராமங்கள் என அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த தேவையை நிறைவேற்றும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சார ம் உற்பத்தி செய்யப்படும். பொதுமக்களுக்கான கட்டமைப்பை மேம்படுத்த, தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 2023ம் ஆண்டு நிறைவில், முதலீடுகளை ஈர்ப்பதில் ஆசியாவிலேயே, முதல் மூன்று இடங்களில் ஒன்றை தமிழகம் பெறும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.



தொலைநோக்கு திட்டத்தின் 10 அம்சங்கள்



தமிழக அரசின், "தொலைநோக்குத் திட்டம் -2023' பத்து நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.



அவை வருமாறு:



* 2023ம் ஆண்டில், இந்தியாவிலேயே பொருளாதார ரீதியாக வளம் பெற்ற மாநிலமாக விளங்கும். தற்போதுள்ள தனிநபர் வருமானம் ஆறு மடங்காக உயர்ந்து, 11 ஆண்டுகளில், உலகளவில் உயர்நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு இணையாக இருக்கும்.



* தமிழகம் உள்ளடக்கிய வளர்ச்சி விகிதத்தை வெளிப்படுத்தும். வறுமை இல்லாத மாநிலமாகவும், வேலைவாய்ப்பு வேண்டுவோருக்கு லாபமான வாய்ப்புகள் அளிக்கப்படும்.



* சமூக வளர்ச்சியில், இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழும். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே, அதிக மனிதவள குறியீடு கொண்ட மாநிலமாக திகழும்.



* வீட்டுவசதி, குடிநீர், துப்புரவு, எரிசக்தி, போக்குவரத்து, பாசனம், இணைப்புகள், சுகாதாரம் மற்றும் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்த உள்கட்டமைப்பு சேவைகளை தமிழகம் வழங்கும்.



* ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு விரும்பும் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இடம்பெறும். குறிப்பாக, இந்தியாவிலேயே மிகவும் விருப்பப்படும் மாநிலமாக இருக்கும்.



* இந்தியாவிலேயே, புதுமையை புகுத்துதலுக்கான மையம் மற்றும் அறிவுசார் தலைநகரமாக தமிழகம் கருதப்படும்.



* அனைத்து குடிமகன்கள் மற்றும் வர்த்தகத்துக்கு, அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தை தமிழகம் உறுதி செய்யும். சுதந்திரமான போக்குவரத்து, கருத்துகள் பரிமாற்றம், வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் உலகத்துடன் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்.



* தமிழகம் தனது சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்து, கவனம் செலுத்தும்.



* இயற்கை சீற்றங்கள், பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் மனிதனால் ஏற்படும் இதர அம்சங்களால் ஏற்படும் நிலையற்ற தன்மையில் இருந்து மாநிலத்தையும் மக்களையும் பாதுகாக்க தமிழகம் நடவடிக்கை எடுக்கும்.



* நிர்வாகத்தில் வெளிப்படையான மற்றும் பதிலளிக்கக் கூடிய கலாசாரத்தை தமிழகம் பின்பற்றும். அனைவருக்கும் பாதுகாப்பு, சம வாய்ப்பு உறுதி செய்யப்படும்.



முதல்வர் ஜெ., முன்னிலையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: சென்னையில் நேற்று நடந்த "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023' ஆவணம் வெளியீட்டு விழாவில், முதல்வர் முன்னிலையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.



திருவள்ளுவர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல்.என்.ஜி., இறக்குமதி மையம் அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தொழில்துறை செயலர் சுந்தரத்தேவனும், இந்திய எண்ணெய் கழகத்தின் தலைவர் புட்டோலாவும் கையெழுத்திட்டனர். பின், முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்களை பறிமாறிக் கொண்டனர். கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில், பெட்ரோலியம், கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோ - கெமிக்கல்ஸ் தொழிற்சாலைகள் மேம்பாட்டு மண்டலம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தொழில்துறை செயலர் சுந்தரத்தேவனும், இந்திய பொறியாளர் நிறுவனத்தின் சார்பில் பூர்வகாவும் கையெழுத்திட்டு முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.

பதிவு செய்தவர் ah kdnl on 4:20 PM. தலைப்பு , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added