குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விமர்சித்து, டில்லி மற்றும் ஆமதாபாத் நகரங்களில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பா.ஜ.,வின் முக்கிய தலைவராக கருதப்படும் சஞ்சய் ஜோஷிக்கும், நரேந்திர மோடிக்குமான மோதல், போஸ்டர் வடிவத்தில் தீவிரமடைந்துள்ளது. பா.ஜ.,வுக்குள் நடந்து வரும் உட்கட்சி மோதல், இதன் மூலம் பகிரங்கமாக வெடித்துள்ளதால், கட்சியின் தலைமை கலக்கம் அடைந்துள்ளது.
தேசிய அரசியலில், பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வரும் பா.ஜ.,வுக்குள், சமீபகாலமாக நடந்து வரும் உட்கட்சி பிரச்னைகள், தற்போது தீவிரம் அடைந்துள்ளன. 2014ம் ஆண்டு நடக்கப்போகும் பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், முக்கிய தலைவர்களுக்குள் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஜோஷிக்கும் இடையில், நீண்ட காலமாக நிலவி வரும் மோதல், தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
போஸ்டர் யுத்தம்: டில்லி அசோகா சாலையில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தை சுற்றிலும், நேற்று திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சஞ்சய் ஜோஷிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டர்களில், "பெரிய மனிதர்... ஆனால் குறுகிய மனம்...' என்ற வாசகங்கள் இருந்தன.இது, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தான் குறிக்கிறது என்பதை, எல்லாரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்ததால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.காலை 10 மணிக்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், அடுத்த அரை மணி நேரத்திற்குள், அவசர அவசரமாக கிழித்து எடுத்துச் செல்லப்பட்டன. முழுக்க முழுக்க, நரேந்திர மோடியை குறிவைத்து ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் மூலம், பா.ஜ., உட்கட்சி பூசல் பகிரங்கமாகியுள்ளது. இந்த போஸ்டருக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, சஞ்சய் ஜோஷியே அறிக்கை வெளியிட்டாலும் கூட, அமைதியை ஏற்படுத்த வில்லை.
அத்வானி கவலை:கடந்த சில தினங்களுக்கு முன், மூத்த தலைவர் அத்வானி, தனது வலைப்பதிவு மூலம் தெரிவித்திருந்த செய்தியில், பா.ஜ .,வுக்குள் நிலைமைகள் சரியில்லை என, கவலை தெரிவித்து இருந்தார். உ.பி., மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், பா.ஜ.,வுக்குள் நடந்த பல்வேறு பிரச்னைகளை கோடிட்டும் காட்டியிருந்தார். கடந்த வாரம், மும்பையில் நடைபெற்ற பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்திற்கு, சஞ்சய் ஜோஷி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், ஜோஷி வந்தால், தான் வர முடியாது என்று, மோடி பிடிவாதம் காட்ட ஆரம்பித்தார். சஞ்சய் ஜோஷி வர மாட்டார் என்று, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி வெளிப்படையாக அறிவித்த பின்பே, மோடி செயற்குழுவுக்கு வந்தார். உ.பி., சட்டசபை தேர்தலில் முக்கியப் பொறுப்பாளராக சஞ்சய் ஜோஷி நியமிக்கப்பட்டதால், அத்தேர்தல் பிரசாரத்திற்கு மோடி செல்லாமல் இருந்தது வரலாறு. செக்ஸ் சி.டி., சர்ச்சையில் சிக்கி, முன்பு அவமானப்பட்ட ஜோஷி, ஆர்.எஸ்.எஸ்., தலைமைக்கு நெருங்கியவரும் கூட என்பதால், அவருக்கு பதவி தர, கட்காரி ஆதரவு காட்டுகிறார் என்ற கருத்து உள்ளது.
இருவேறு கருத்துக்கள்:இவை ஒருபுறம் இருக்க, பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "கமல்சந்தேஷ்' இதழில், மோடியின் மீது விமர்சனத்தை வைத்து எழுதப்பட்டிருந்த கட்டுரையும், கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, தேர்தலுக்கு பிறகு தான் தீர்மானிக்க வேண்டுமென, அந்த கட்டுரை குறிப்பிடுவதால், மோடியின் ஆதரவாளர்கள் பலரும் கடுப்பில் உள்ளனர். அதேபோல, "ஆர்கனைசர்' என்ற வார இதழில், வாஜ்பாய்க்கு அடுத்து, மக்களிடம் ஓட்டு வாங்கும் அளவுக்கு வசீகரம் நிறைந்தவர், நரேந்திர மோடி மட்டுமே என்று எழுதப்பட்டுள்ளதாலும், சர்ச்சை உருவாகியுள்ளது. கட்சியில், மோடி ஆதரவு, எதிர்ப்பு என்று, இரு கோஷ்டிகள் உருவாகியிருப்பதால், அதிக சர்ச்சை எழுந்துள்ளது.
மூன்று பேரில் யார்?இந்த போஸ்டரை ஒட்டியது யார் என்பதில், கட்சித் தலைவர்கள் பலருக்குமே, பெரும் குழப்பம். மோடியின் எதிர்ப்பாளர்கள் என்று பார்த்தால், சஞ்சய் ஜோஷியை தவிர, மூன்று பேர் தான். பா.ஜ.,வை விட்டு பிரிந்து, தனி அமைப்பு நடத்தி வரும், ஜடோபியா ஒருவர்.குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் இரண்டாமவர். இன்னொருவர் சுரேஷ் மேத்தா. இவர்கள் மூன்று பேரில், யாராவது ஒருவர் இந்த போஸ்டரின் பின்னணியில் இருப்பார்களோ என்ற சந்தேகம், பா.ஜ., தலைமைக்கு உள்ளது. இது தவிர, காங்கிரசே கூட, இதுபோன்ற காரியத்தை செய்து, உட்கட்சி பிரச்னையை பெரிதாக்க முனைந்ததா என்ற பலத்த சந்தேகமும் உள்ளது. பா.ஜ., செய்தித் தொடர்பாளரான ரவிசங்கர் பிரசாத்திடம், நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, "அந்த போஸ்டர் விவகாரம், பெரிய விஷயம் அல்ல. தவிர, அந்த போஸ்டர்களுக்கும், பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் இல்லை. அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.