மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க கோரிக்கை
"மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு முதல் கொழும்பு - மதுரை இடையே விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதால், மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கும், விமானங்களை ஏர் இந்தியா மூலம் இயக்க மத்திய அரசு முன்வர வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.
சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங்கை, மதுரை முன்னாள் எம்.பி.,யான ராம்பாபு நேரில் சந்தித்து, ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளாவில் மொத்தம் நான்கு விமான நிலையங்கள் உள்ளன. கோழிக்கோடு, திருவனந்தபுரம், கண்ணூர், கொச்சி என இருக்கும் அவையனைத்தும் சர்வதேச விமான நிலையங்களே. தமிழகத்திலோ சென்னையைத் தவிர, வேறு எதுவும் சர்வதேச விமான நிலையங்களாக இல்லை. இத்தனைக்கும் மதுரையும், கோவையும், முழுக்க தகுதி படைத்த நகரங்களாகவே உள்ளன. ஆனாலும், இங்கிருக்கும் விமான நிலையங்கள், உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கி வருகின்றன. சாப்ட்வேர் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும், அந்த துறை அளித்த மிகப் பெரிய பங்களிப்பையும், இந்த இரு நகரங்களும் பெற முடியாமல் போனதற்கு, இங்கு சர்வதேச விமான நிலையங்கள் இல்லாததே காரணம்.
விமான போக்குவரத்து: மதுரை விமான நிலையத்தில், இமிகிரேஷன் எனப்படும், வெளிநாட்டவர்களை சோதனை செய்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதியன்று, மதுரை - கொழும்பு இடையில், விமான போக்குவரத்தை ஏர்லங்கா நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இதனால், ஏர் இந்தியாவும் சர்வதேச விமான சேவையை மதுரையிலிருந்து துவக்க வேண்டும். மதுரை மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மிக அதிகமான மக்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு மதுரையில் இருந்து, ஏர் இந்தியா விமானங்களை இயக்க முன்வர வேண்டும். வெளிநாடுகளுடன் இந்தியா ஒப்பந்தங்களை போடும் போது, அவற்றில் மதுரை விமான நிலையத்தையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓடுதளம் உயர்கிறது: மதுரை விமான நிலையத்தின் ஓடுதள நீளம், 7 ஆயிரத்து 500 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 610 ஏக்கர் நிலம் கூடுதலாக கையகப்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், ஓடுதளத்தின் நீளம், 7 ஆயிரத்து 500 அடியில் இருந்து, 12 ஆயிரம் அடியாக உயரும். எனவே, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்திட, மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அஜித்சிங், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றவுடன், மே மாதம் கடைசியில் மதுரை வருவதாக உறுதியளித்துள்ளார்.
பதிவு செய்தவர் ah kdnl
on 2:24 PM. தலைப்பு
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன