ஜனாதிபதியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.205 கோடி

புதுடில்லி: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 22 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட வகையில், 205 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக சங்கர் தயாள் சர்மா இருந்த போது, நான்கு பயணங்கள் மூலம், 16 நாடுகளுக்கு சென்றார். அப்துல் கலாம் ஏழு பயணங்கள் மூலம், 17 நாடுகளுக்கு சென்றார். கே.ஆர். நாராயணன் ஆறு பயணங்கள் மூலம், 10 நாடுகளுக்கு சென்று வந்தார். ஆனால், தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 12 வெளிநாட்டு பயணங்கள் மூலம், 22 நாடுகளுக்கு தன் குடும்பத்தினருடன் சுற்றுப் பயணம் செய்துள்ளார். இந்த வகையில், இவரது வெளிநாட்டு பயணத்திற்காக, 205 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா தனி விமானம் ஏற்பாடு செய்த வகையில், 169 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி என்பதால், இவரது பயண செலவை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுள்ளது. இந்த வகையில் ஏர் இந்தியாவுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை, 153 கோடி ரூபாய் அளித்துள்ளது. இன்னும், 16 கோடி ரூபாய் கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.